காணி அபகரிப்பு தொடர்பில் முல்லைத்தீவில் முக்கிய கலந்துரையாடல்
கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர், வடக்கு மாகாணங்களில் நில உரிமைக்கான ஒருங்கிணைப்பு தொடர்பான கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில், இன்று(13.05.2026) முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
காணி அபகரிப்பு
இதில், முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புகள் மற்றும் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நில உரிமைக்காக செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள், முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வாட்டுவாகல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களும், சிவில் அமைப்புப் பிரதிநிதிகளும், அரசியல் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, நில மீட்பிற்காக வடக்கு கிழக்கை இணைக்கும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், முல்லைத்தீவு மக்களினால் தங்களது ஆதரவும் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் குருந்தூர் மலை விவகாரம், கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் இடம்பெறும் நில அபகரிப்புகள், கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டம், வாட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.