இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை அரசாங்கத்தின் கோவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், பசுமை விவசாயத்திற்கான மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சுக்கு இணையாக இந்த மத்திய நிலையத்தை கொண்டு செல்லவுள்ளதாகவும் இன்று முதல் குறித்த மத்திய நிலையம் கோவிட் பரவலை தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து வேறாக செயற்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தலைமையில் ஒரு குழுவின் உறுப்பினர்களாக, ஒரு குழுவாக தாம் ஒன்றிணைந்து, உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுமார் 2 ஆண்டுகளாக அயராது உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் தாம் மூன்று முக்கிய அலைகளை சந்தித்ததாகவும், குடிமக்களை கண்ணுக்கு தெரியாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கான மகத்தான சவால்களுடன் குழுப்பணி ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை வகுக்கவும், பல்வேறு திட்டங்களையும் நடைமுறைகளையும் செயற்படுத்த, முக்கிய குழு, நிபுணர் குழு மற்றும் பல்வேறு பணிக்குழுக்களாக தாம் ஒன்றாகச் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல், இந்த நிலையம் மற்றொரு மகத்தான தேசிய முயற்சிக்கு பங்களிப்பினை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய செயல்பாட்டு மையத்தின் அனுபவங்களை ஒரு ஆவணமாக தொகுத்துள்ளதாகவும், மேலும் இந்த ஆவணத்தின் இறுதிப் பதிப்பு அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.