நோயாளிகளுக்கு இறுதிவரை பராமரிப்பு - நிர்கதியாக்கப்பட்டவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வாழ்வின் இறுதி கட்டத்தில் உள்ளவர்கள், தங்களை தாங்களே காப்பாற்ற முடியாதவர்கள், மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவிலோ அல்லது வீட்டிலோ வைத்து பராமரிக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இறுதிவரை முறையாக பராமரிப்பதற்காக நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
சாவகச்சேரி, சரசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “கம்ஃபர்ட் கெயார் ஹோம்” (Comfort Care Home) எனப் பெயரிடப்பட்டுள்ள வலிதணிப்புப் பராமரிப்பு இல்லத்தின் (Palliative Care Home) திறப்பு விழாவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளுக்கு இறுதிவரை கவனிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிலையத்தின் சேவையாக, நோயாளிகளுக்கு இறுதிவரை கவனிப்பு வழங்குவதுடன், குறிப்பாக அவர்களுக்கு ஏற்படும் வலிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகள் வழங்கப்படுகின்றன இந்த சேவை இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.

இந்த சேவையைப் பெற விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு வைத்தியசாலை ஊடாகவோ அல்லது மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பெயரிலோ சில தகவல் மற்றும் விவரங்களை வழங்கிய பின்னர், முறையான அனுமதி பெற்று நோயாளிகளை இங்கு வைத்து பராமரிக்க முடியும்.
சுகாதார அமைச்சின் முழுமையான அனுசரணையோடு, எதிர்காலத்தில் இந்தச் சேவை மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதால், ஏனைய நன்கொடையாளர்களும் தங்களது உதவிகளை வழங்கி பங்களிப்பு செய்ய முடியும் என்றார்.