இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முதல் பதிவுக்கு விண்ணப்பிப்பதற்கும், தமது முன்னைய பதிவை நீடிப்பதற்கும் பணியகம் அனுமதி வழங்கியுள்ளது.
வேலை தேடும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் சேவையை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வசதி
இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், பணியகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்களில் முக்கிய தகவலை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வசதியை பயன்படுத்துவதன் மூலம், இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்படும் நாளில் விமான நிலையப் பணியகப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகளை தாமதமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1989 எனும் பணியகத்தின் 24 மணி நேர சேவையை அழைப்பதன் மூலம் இது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.