உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரையில் 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறுகின்றது.
இந்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், 279, 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.
பரீட்சை விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பரீட்சை விதிமுறைகளை மீறி செயற்படும் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார்.
அதேநேரம், பரீட்சை வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.