ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதன முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு சாத்தியமில்லை - ஜி.எல்.பீரிஸ்
கடந்த 24 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதன முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அமைச்சரவை நேற்று கூடிய போது, அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கருத்தை முன்வைத்ததாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப்பட்டால், அது ஏனைய பொதுத்துறை சேவைகளையும் பாதிக்கும்.
எனவே, முழு பொதுச் சேவைக்கும் நியாயமான ஒரு தீர்வை கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக ஜிஎல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டின் தற்போதைய மற்றும் கடுமையான நோய் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் பாதீட்டின் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வர அமைச்சரவை முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, அனைத்து அரசாங்க வருமானமும் சரிந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை வாழ வைப்பது அவசியம் என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் கூறியுள்ளார்.




