இலங்கைக்கு மீண்டும் வருகை தர உள்ள IMF குழு !
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் நாட்டிற்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தெரிவித்தார்.
இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்கவே குறித்த குழுவினர் வருகை தர உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, 'டித்வா' புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டித்வா புயலின் தாக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் ஒரு வாரத்தில் நாம் மீண்டும் இலங்கைக்கு வருகிறோம்.
வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டத்தில் 'டித்வா' புயலின் தாக்கம் அதில் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இதற்கிடையில், நெருக்கடி உச்சத்தில் இருந்த சந்தர்ப்பத்திலிருந்து இதுவரையில் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் குறிப்பிட்டார்.
அடிப்படை நோக்கங்கள்
சீனிவாசன் கூறியது போன்று வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் அவ்வாறே உள்ளன.

ஏனெனில் கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீசிய புயலுக்குப் பின்னரும் வேலைத்திட்டம் வலுவாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.