இலங்கைக்கான கடன் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகாரம்
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது மறுஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று (27) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழு கூட்டத்தில் குறித்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை 695 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையைப் பெற உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதிக்கு 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.
ஆறாவது கடன் தவணைக்கான ஒப்புதல்
இந்நிலையில், இலங்கைக்கான கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நேற்று கூடியது.
அதனைத் தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கடன் தவணைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா அறிவித்துள்ளார்.
சவாலான சூழ்நிலையிலும் இலங்கை விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் விதிகளை வலுவாகச் செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டித்வா புயல் மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் போர் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் குறைந்து வரும் சுற்றுலா வருவாய் ஆகியவையே இதற்குக் காரணங்கள் என அது சுட்டிக்காட்டியுள்ளது.
கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் இருந்தாலும், கடன் நிலைத்தன்மை அபாயங்கள் அதிகமாக இருப்பதால், பணவியல் கொள்கையானது விலை நிலைத்தன்மைக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.