இலங்கையின் பொருளாதாரத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள தாயாராகும் ஐ.எம்.எப்
இலங்கையில் பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போதே மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சவாலான பொருளாதார சீர்திருத்த
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சவாலான பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டிள்ளனர்.
மேலும், ஆசியாவின் முன்னோடி முயற்சியான ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவதில் இலங்கையின் முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொள்கை சார்ந்த விடயங்கள் மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலப்பகுதியில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படி இலங்கை நம்பிக்கையுடன் அரசாங்க வருமானத்தை உயர்த்தியுள்ளதாக சமீபத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளதாகவும், அதன் மூலம் சர்வதேச சமூகம், உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன்வழங்குநர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |