கிழக்கு ஆளுநரின் சேவைகளுக்கு ஐ.எம்.எப் பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஸ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரேஸ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஸ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொருளாதார மறுசீரமைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு கடந்த 11ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்தனர்.
நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி குழுவினருடன் இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த குழுவினர் நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளை ஆய்வு செய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியுடன் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் குறித்த குழு கண்காணிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |