யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் மீட்பு: ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (03.10.2026) காலை 11 மணியளவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வன்னிப் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி லொறி ஒன்றில் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்படுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
சுற்றிவளைப்பு
இதனையடுத்து, கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸநாயக்க தலைமையிலான பொலிஸ் அணியினர் விரைந்து செயற்பட்டு, குறித்த லொறியை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து வழிமறித்துள்ளனர்.

எனினும், லொறியின் சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை நிறுத்தாமல் மிருசுவில் வீதியூடாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதையடுத்து பொலிஸார் குறித்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். பின்னர், மன்னங்குறிச்சி வீதியூடாகச் சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி தப்பிச் செல்ல முயன்ற நிலையில், எழுதுமட்டுவாள் கண்டல் நீரேரிப் பகுதியில் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைத்து லொறியை கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, லொறியில் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவு முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.