5 மாதங்களில் 1300-க்கும் மேற்பட்டோர் கடலில் பலி! வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை
ஆபிரிக்காவில் இருந்து கடல் வழியாக ஸ்பெயின் நாட்டு கடற்கரையை அடைய முயன்ற 1,300-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புலம்பெயர்வோரைக் கண்காணித்து வரும் 'காமினாண்டோ ஃப்ரோன்டெராஸ்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் புதன்கிழமை இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டும் அறிக்கை
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் ஸ்பெயின் கரையை அடைய முயன்றவர்களில் 142 பெண்கள் மற்றும் 129 குழந்தைகள் உட்பட மொத்தம் 1,317 பேர் கடலில் மூழ்கியும், கடுமையான பயணச் சூழல்களாலும் உயிரிழந்துள்ளனர்.

இதில் புலம்பெயர்ந்தோருடன் பயணித்த 27 படகுகள் நடுவழியில் முற்றிலும் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் லியோ ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு வருகை தரவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மரணங்களின் அதிகரிப்பு
ஐரோப்பாவிற்கு மிக அருகில் உள்ள மொரிட்டானியா போன்ற நாடுகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புலம்பெயர்ந்தோர் தங்களைக் காத்துக்கொள்ள அதிக ஆபத்து நிறைந்த நீண்ட கடல் வழிகளைத் தேர்ந்தெடுப்பதே இந்த மரணங்களின் அதிகரிப்புக்குக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் கரையை அடைய முயன்ற 3,090 பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்தோரின் இந்த அவலநிலை, சர்வதேச ஒழுங்கின் நெறிமுறை அடித்தளத்திற்கே சவால் விடும் ஒரு பெரும் பிரச்சினை என்று போப் லியோ தனது ஸ்பெயின் பயணத்தின் போது கவலை தெரிவித்துள்ளார்.