கள விஜயத்தின் போது சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் (Photos)
கிளிநொச்சி - கல்மடு குளத்திற்கான கள விஜயமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அங்கு நடைப்பெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு என்பவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
நீர்ப்பாசன செழுமை திட்டம்
'நீர்ப்பாசன செழுமை' எனும் இத்திட்டத்திற்கு அமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் கல்மடு குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை நேற்று (15.03.2023) அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் இத்திட்டத்தின் பணிகளை பூரணப்படுத்துவதற்கு மேலும் 300 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 500 மில்லியன் ரூபா நிதியினை இத்திட்டத்திற்காக உலக வங்கி ஒதுக்கியிருக்கும் நிலையிலேயே மேலும் 300 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயன்
மேலும், கல்மடு குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் 18 அடியிலிருந்து 26 அடி உயரமாக உயர்த்தப்படுவதுடன், அப்பகுதியைச் சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட நன்னீர் மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதாகவும், 2000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் கூறப்டுகிறது
அத்துடன் இத்திட்டத்தை எதிர்வரும் மழை பருவ காலத்திற்குள் முடித்து வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலணை பால் உற்பத்தியாளர்கள்
இதேவேளை வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை நிலையான ஓர் இடத்தில் வைத்து சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா அசாதாரன நிலையை அடுத்து இயங்குநிலை இல்லாது காணப்பட்ட வேலணை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கட்டடத்தில் வேலணை கமக்கார பால் சேகரிப்பு அங்கத்தவர்கள் தாம் வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் பால் சேகரிப்பு மற்றும் உற்பத்திகளை மொத்தமாக கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்தனர்.
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாழடைந்த குறித்த கட்டடத்தை ஆஸ்திரேலிய தன்னார்வ நிறுவனமான 'ப்பிரன்ஷ்' நிறுவனம் புனரமைத்து உள்ளூர் விவசாய பொருட்களை சந்தைப் படுத்துவதற்காக என வழங்கியிருந்தது.
குறித்த கட்டடத்தில் வேலணை பிரதேச பால் உற்பத்தியாளர்கள் தமது அறுவடைகளை இதுவரைகாலமும் மொத்தமாக கொள்வனவு செய்து தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்துவந்தனர்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தினர் குறித்த கட்டடத்தை பிறிதொரு அமைப்பினருக்கு வழங்கியது. இதனால் இதுவரைகாலமும் பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்துவந்த உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.
இதையடுத்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இன்றையதினம் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய வேலணை பால் உற்பத்தியாளர்கள் தமது பிரச்சினைகள் மற்றும் நிரந்தர் கட்டடத்தின் தேவைப்பாடு தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தனர்.
பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையில் கரிசனை கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசர் அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே சமரசமான இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-தீபன்