சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று(07.05.2026) இடம்பெற்ற மணல் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான இரண்டு முக்கிய கூட்டங்கள் நடைபெற்றன.
இந்தக் கூட்டங்களில் அரசாங்க அதிபர், முப்படை அதிகாரிகள், துறைசார் திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் மணல் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஏழை எளிய மக்கள் மற்றும் அரசாங்க கட்டுமானப் பணிகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இனிவரும் காலங்களில் துறைசார் திணைக்களங்களின் அனுமதியுடன் மேலதிகமாக அரசாங்க அதிபரின் நேரடி ஒப்புதலும் அவசியமாகும். இது குறித்த புதிய சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்.
மேலும், மணல் அகழ்வு நடைபெறும் முக்கிய மூன்று ஆற்றுப்படுகைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படும். மணல் கொண்டு செல்லும் அனுமதிப்பத்திரங்கள் இதுவரை கைமுறையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இனி QR ஸ்கேன் முறை மூலம் டிஜிட்டல் முறையில் ரத்து செய்யப்படும்.
இதன் மூலம் ஒரே அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பயன்படுத்துவது தடுக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட விசேட படைப் பிரிவு ஒன்று நேரடியாக அரசாங்க அதிபருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும்.
இந்தப் பிரிவினர் மாவட்டத்திற்கு வெளியிலிருந்து நியமிக்கப்படுபவர்கள் என்பதால், தகவல் கிடைத்த 20 - 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அத்துடன், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
இந்த நடவடிக்கைகள் மூலம் மணல் விநியோகத்தை சீர்ப்படுத்தவும், சட்டவிரோத மணல் அகழ்வை முற்றாகக் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam