இலங்கை குடியேற்றவாசிகள் தொடர்பில் லிபரல் கட்சியின் பிரசாரம்:விசாரணைகளை ஆரம்பித்துள்ள புதிய அரசாங்கம்
அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொதுத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கையில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிய படகு அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது என மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் சம்பந்தமாக தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசனுக்கு தேர்தலில் சாதகமான நிலைமை பெற்றுக்கொடுப்பதற்காக லிபரல் கட்சியின் பிரசாரப் பிரிவு இவ்வாறான பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உண்மையாக நடந்து இருக்குமாயின் அந்த படகு அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் வர எப்படி சந்தர்ப்பம் கிடைத்து என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
அத்துடன் அப்படியான சம்பவம் எதுவும் நடந்திருக்கவில்லை என்றால், லிபரல் கட்சியின் பிரசாரப் பிரிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற்ற தினத்தில் லிபரல் கட்சியின் பிரசாரப் பிரிவு இலங்கையில் இருந்து வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிய படகை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் என்ற செய்தியை குறுந் தகவல் மூலம் பகிர்ந்து இருந்தது.
லிபரல் அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் சம்பந்தமாக கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அந்த கட்சியின் பிரசாரப் பிரிவு இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.