நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத கடற்றொழில் வள்ளங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதன் விளைவாக, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட 20 வள்ளங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (08) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள்
உள்நாட்டு நிர்மாண விதிமுறைகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட, பல்வேறு தினங்களில் கைப்பற்றப்பட்ட வெட்டு வள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்களே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எரியூட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த 03.04.2025 அன்று கைப்பற்றப்பட்ட எட்டு வள்ளங்களும் 02.04.2025 அன்று கைப்பற்றப்பட்ட ஏழு வள்ளங்களும் 28.02.2025 அன்று கைப்பற்றப்பட்ட மூன்று வள்ளங்களும் 25.02.2025 அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு வள்ளங்களுமாக 20 வெட்டு வள்ளங்கள் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சட்டபூர்வமாக கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் கடற்றொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





