யாழில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள்
வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்க சங்கிலி வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான என்எஸ் பல்சர் மோட்டார் சைக்கிள் இன்று மாலை திருடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அதே மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி பயணித்த இருவர், இன்று மாலை பருத்தித்துறை திக்கம் பகுதியில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துத் தப்பிச்சென்றுள்ளனர்.
அத்துடன் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளைக்கு முற்பட்ட போதும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சாதூரியமாகச் செயற்பட்டதால் கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர்.
இந்த திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுன்னாகம்
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.



