ஈரானில் பல்கலைக்கழக மாணவியின் செயல் : காணொளியை வெளியிட்ட சர்வதேச மன்னிப்பு சபை
ஈரானில் (Iran), தனது பல்கலைக்கழகத்திற்கு வெளியே மாணவி ஒருவர் தனது உள்ளாடைகளுடன் நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அது நாட்டின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் என்று மாணவர் குழுக்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் கூறியுள்ளன.
சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த காணொளியை, சர்வதேச மன்னிப்பு சபையும் (Amnesty International) பகிர்ந்துள்ளது.
பெண் மனநலப் பிரச்சினையால் பாதிப்பு
அதில், அந்தப் பெண் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ளாடையுடன் மற்றும் தலைமுடியை அவிழ்த்த வண்ணம் அமர்ந்திருப்பதையும் பின்னர் நடமாடுவதையும் காட்டுகிறது.
தெஹ்ரானில்; உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறைகேடான நடைமுறைக்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை சனிக்கிழமை கூறியுள்ளது.
இந்தநிலையில், ஈரானிய மாணவர் சமூக ஊடகமான அமீர் கபீர் செய்தி மடலின் படி, ஈரானிய தன்னார்வ துணை இராணுவக் குழுவான பாசிஜ் உறுப்பினர்களால் அந்தப் பெண் பல்கலைக்கழகத்தின் மைதானத்திற்குள் வைத்து துன்புறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தப் பெண் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மக்கள் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஈரான் முழுவதும் ஆடைக் கட்டுப்பாடு
ஈரானின் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் (அல்லது தலைக்கவசம்) அணிவது கட்டாயமாகும், இது நாட்டின் அறநெறி என்ற வகையில் பொலிஸார் அதனை கடுமையாக நடைமுறைப்படுத்துகின்றனர்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் ஈரான் முழுவதும் ஆடைக் கட்டுப்பாடுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், தலையில் முக்காடு சரியாக அணியவில்லை என்று கைது செய்யப்பட்ட பின்னர் அறநெறிப் பொலிஸாரின் காவலில் இறந்த சம்பவமும் பதிவாகியிருந்தது.
இந்தநிலையில் பல ஈரானிய பெண்கள் பொது இடங்களில் தங்கள் முக்காடுகளை அகற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இடம்பெற்ற வன்முறைகளின்போது பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |