கிளிநொச்சியில் சட்டவிரோத இழுவை தொழிலில் ஈடுபடுவோர்: பாதிக்கப்படும் நன்னீர் கடற்றொழிலாளர்கள்
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடு குளத்தில் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான ஏனைய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக நன்னீர் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் கூறுகையில்,
"இரணைமடு குளத்தில் சுமார் 50 கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏனைய கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் கடற்றொழிலாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய நடவடிக்கை
நீரியல் வள திணைக்களம் குறித்த தடை செய்யப்பட்ட தொழிலை மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்தும் அதனையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்தும் சிலர் இவ்வாறு தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுபட்டால் ஏனைய தொழிலாளர்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவார்கள்.
அதேவேளை, இரணைமடு குளத்தை நம்பி 152 குடும்பங்கள் தங்களது வாழ்வாதார தொழிலாக நன்னீர் கடற்றொழிலை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த விடயம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்ததாகவும் தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |