யாழில் மரமுந்திரிகை தோட்ட நுழைவாயில் கதவுகள் திருட்டு
யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்றிட்டத்திற்கான பொது நுழைவாயில் கதவுகள் இனம் தெரியாத நபர்களால் திருடி செல்லப்பட்டுள்ளன.
இச்சம்பவமானது, கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
நாகர்கோவில் மேற்கு ஜே/424 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மரமுந்திரிகை பயிற்செய்கை திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
விசேட வேலைத்திட்டம்
அத்திட்டத்தின் ஒரு பகுதியாக முப்பது ஏக்கர் நிலப்பரப்பை சீர் செய்து தூண், முட்கம்பிகள் கொண்டு வேலி அமைக்கப்பட்டு முப்பது பேருக்கும் பிரிக்கப்பட்டு முப்பது கிணறுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
அதனை பராமரிப்பதற்காக நோர்வே (Norway) நாட்டின் நிதிப்பங்களிப்பிலும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அனுசரணை ஊடாகவும் இந்த திட்டம் மாவட்ட செயலகம் மூலமாக பிரதேச செயலகத்தின் இணைப்பின் ஊடாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது.
இத்திட்டம் முன்னோக்கிய ஒரு செயற்றிட்டமாக காணப்பட்டதோடு இரண்டு வருடங்களில் மர முந்திரிகையிலிருந்து பயனையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்
இந்த திட்டத்திற்காக வீதியமைப்பதற்கான ஒழுங்கைகள் இடப்பட்டு முப்பது காணிகளையும் இணைப்பதற்காக பொதுவாக ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந் நுழைவாயில் கதவினை நேற்று முன்தினம் உடைத்து இனம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கிராம சேவையாளர் மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, நாகர்கோவில் பகுதியில் கசிப்பு உற்பத்தி, இளநீர் பறித்தல், கொள்ளை, என குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால் தமது உடமைகளை பாதுகாத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |