சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பெயர் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு! இளங்குமரன் எம்பி
வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டவிரோத மணல் அகழப்பட்ட பிரதேசத்தை பார்வையிட்ட இளங்குமரன் எம். பி அதிகளவான மணல் மண் அகழப்பட்ட தாளையடி பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது மணல் மண் அகழப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்ட அவர் மிகவும் கவலை அடைந்ததுடன் ஊடகங்களுக்கு சில முக்கிய விடயங்களை வெளிப்படுத்தினார்.
அவர் கருத்து தெரிவிக்கையில், வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பவர்கள் பொலிஸார்.
பொலிஸாருடைய பெயர் விபரங்கள்
போதை பொருள் கடத்தல் காரர்களிடம், மணல் கடத்தல் காரர்களிடமும் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள்.
பொலிஸார் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள். அவர்களுடன் சில பொலிஸாரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் பொலிஸாருடைய பெயர் விபரங்கள் யாவும் நாங்கள் பெற்றுள்ளோம்.
பாதுகாப்பு அமைச்சு
இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு பொலிஸாரும் உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது.
இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம்.
கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் பொலிஸாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என என அவர் கடுமையாக எச்சரித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



