மீண்டும் தமிழரசுக் கட்சிக்கு வழக்கா..! இந்துக்களின் புனித நாளால் வெடித்த புதிய சர்ச்சை
இலங்கை தமிழரசுக் கட்சியும் சர்ச்சையும் அண்மைக்காலங்களாகவே ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல மாறியிருக்கின்றன.
கட்சி தலைமைப் பதவியில் சர்ச்சை, செயலாளர் பதவியில் சர்ச்சை, முடிவுகளில் சர்ச்சை என்று தமிழரசுக் கட்சியின் உள்ளக முரண்பாடுகள் முடிவில்லாது நீண்டு கொண்டே செல்கின்றது.
தமிழரசுக் கட்சியின் முக்கியப் பதவி நிலைகள் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அடுத்து இரண்டு நாட்களில் அந்த வழக்கின் தவணையும் இருக்கின்ற நிலையில் கட்சி சார்ந்த அடுத்த வழக்குக்கு தயாராகின்றனர் கட்சி உறுப்பினர்கள்.
உள்ளக பிரச்சினைகள்
ஒரு நாட்டின் தலைமைத்துவத்திற்கு, தலைவரும், ஒற்றுமையான சகாக்களும், பலமான எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும் என்பது போலவே ஒரு மக்கள் நலன் சார் கட்சிக்கு ஆளுமைமிக்க தலைமைத்துவமும் ஒற்றுமையான உறுப்பினர்களும் அமைய வேண்டியது மிக அவசியமானது.
அதிலும் குறிப்பாக, இலங்கை தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் தமிழரசுக் கட்சிக்கு மக்களின் நலன் சார்ந்து செயற்பட வேண்டிய மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பு உண்டு. பொறுப்பு மாத்திரமின்றி அது மிக்பெரிய கடமையும் அத்தியாவசியமானதும் கூட.
இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் தொடர்பில் தற்போது கட்சியினருக்குள்ளேயே முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன் சிலர் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பொறுப்புக்குரியவர்களை எச்சரித்தும் உள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை நாளைய தினம்(23) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அழைப்பு அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு வட்ஸப் செயலி ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும், நாளைய கூட்டத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தும், வருகையை உறுதிப்படுத்தியுமுள்ளதுடன், மேலும் பலர் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
நாளையதினம் இந்துக்களின் புனித நாளான சித்திரா பௌர்ணமி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், கட்சியில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதன் காரணமாக பலர் இந்தக் கூட்டத்திற்கு மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும், ஒரு சிலர் நாளை விடுமுறை தினம் என்பதாலும், அடுத்த அரசியல் கூட்டங்கள், நாடாளுமன்ற கூட்டம் உள்ளிட்ட காரணங்களாலும் நாளையதினமே கூட்டத்தை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.
அத்தோடு, கட்சியின் யாப்புக்கமைய முடிவுகள் எடுக்கப்படாததன் காரணமாக நீதிமன்றத்தை நாங்கள் நாடுவோம் என்றும் பொறுப்புக்குரியவர்களை எச்சரித்தும் உள்ளனர்.
நீதிமன்றத்தை நாடுவோம்
குறிப்பாக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித் தம்பி யோகேஸ்வரன்(S.Yogeshwaran), மத்திய செயற்குழுக் கூட்டத்தினை நாளைய தினம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், “கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால், அந்தக் கூட்டத்திற்கும் ஒரு யாப்பு உண்டு. எதற்கெடுத்தாலும் யாப்பினைப் பற்றிக் கதைப்பவர்கள் இந்த கூட்டம் தொடர்பிலும் உரிய முறையில் அறிவித்து, கடிதம் அனுப்பி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இப்போது இவை ஒன்றும் நடப்பதில்லை.
தொலைபேசியில் கதைப்பதும் அறிவிப்பதும், வட்ஸப்பில் அறிவிப்பதுமே நடக்கின்றது. அப்படி ஒரு கூட்டம் நடைபெற முடியாதுதானே. கூட்டம் கூடுவதற்கு யாப்பு தொடர்பில் கதைக்கின்றவர்கள். யாப்பின் படி தான் நடந்து கொள்ளவும் வேண்டும். கட்சியின் யாப்பு என்பது அனைத்திற்கும், அனைவருக்கும் பொதுவானது.
முறையாக எதுவுமே செய்யப்படாமல், எடுத்ததற்கெல்லாம் யாப்பை தூக்கி காட்டுவதும், ஏதாவது ஒன்றை செய்து குழப்பி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதும் நோக்கிலும் தான் இப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இங்கிருக்கும் நடைமுறைகள் பிரச்சினைகளைப் பார்த்து எங்களுக்கும் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். கட்சியின் நலன்கருதி நாங்கள் அமைதியாக இருக்கின்றோம்.
நாளையதினம் இந்துக்களின் புனிதமான நாளாக இருக்கும் நிலையில் திட்டமிட்ட வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதுனர். 24ஆம் திகதி வழக்கு இருக்கின்றது என்பது உண்மை. அதற்காக நாளையதினம் கூட்டத்தை கூட்டுவது என்பது எப்படி சரி. வேண்டும் என்றால் இன்னுமொரு நாளைப் பார்த்து திருகோணமலையில் வைத்து கலந்துரையாடுவோம்” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கூட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(R.Shanakkiyan) குறிப்பிடுகையில், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமானது கட்சி தொடர்பான நீதிமன்ற வழக்கிற்கு முன்னர் நடைபெற வேண்டியது மிக மிக அவசியமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த வழக்குத் தவணை தொடர்பில் தவறான கருத்துக்களை எமது கட்சியின் சில உறுப்பினர்கள், இன்னும் சில உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.
கூட்டத்தை நடத்துவதே சரி..
மத ரீதியான வழிபாடுகள் என்பது மிக முக்கியமானதுதான். அதன்படி நேரத்தை பொருத்தமாக இருப்பதாலும், கூட்டத்தை முடித்து விட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கும் திரும்ப முடியும். மீண்டும் ஒரு முறை கட்சியின் கூட்டத்தினை நடத்துவதற்கு பெரும்பான்மை கோரம் இருக்குமானால் கட்சியின் செயலாளரால் கூட்டத்தை நடத்துவதான் சரியாக இருக்கும்.
கட்சி தொடர்பான வழக்கினை வெகு விரைவில் முடிக்க வேண்டும் என்பதும் மிக மிக முக்கியமானதாக இருக்கின்றது. இதன் காரணமாக மத்திய குழு கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டியது அவசியமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை தினங்கள் இருந்திருக்கின்றன. வழக்குத் தவணை 24ஆம் திகதி இருக்கின்றது என்பதும் முன்னரே தெரியும். இவ்வாறான நிலையில் ஏன் வார இறுதி நாட்களில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்தோடு, நாளைய தினம் இந்துக்களின் புனித தினம் என்பதன் காரணமாக நாளைய கூட்டத்திற்கான அழைப்பு முறையற்றது என்றும், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்றும் விமர்சனம் வெளியிட்டுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |