இலங்கையில் தமிழர்கள் உட்பட 7 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்
தியத்தலாவவையில் தமிழர்கள் இருவர் உட்பட ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து தொடர்பான தகவலை நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.
தியத்தலாவ, "Foxhill Supercross" கார் பந்தயத்தின் போது, ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பந்தய நடுவர்களின் தவறினால் இந்த விபத்து நேர்ந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கையை மறுத்த ட்ரெக் மார்ஷல்
முதல் கார் தடத்தில் விபத்துக்குள்ளானதை அடுத்து, அப்பகுதியில் அதிக தூசு படிந்திருந்தது. நடுவர்களின் கவனக்குறைவால் இரண்டாவது காரும் தடத்தில் விபத்துக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, கார் சாரதிகளின் உதவியாளர்கள் பந்தயத்தை நிறுத்துமாறு ட்ரெக் மார்ஷல்களிடம் கோரிக்கை விடுத்த போதும் அவர்கள் மறுத்ததாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
கார் பந்தயம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே கார் ஒன்று விபத்துக்குள்ளாகி புரண்டது. கடுமையான தூசி வெளியேறிய நிலையில் வீதியில் நடப்பது கார் ஓட்டுபவர்களுக்கு தெரியாத அளவு மோசமான நிலையில் காணப்பட்டது.
பொதுவாக பந்தயத்தின் போது ஒரு கார் விபத்துக்குள்ளாகினால் அங்கிருக்கும் பணியாளர்கள் மஞ்சள் கொடியை அசைத்து சாரதிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறான நிலையில் இரண்டாவது கார் ஒன்றும் அதே இடத்தில் விபத்துக்குள்ளான போதிலும் போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளனர். இதன் போது இரண்டாவது காருடன் மோதிய மூன்றாவது கார் பொது மக்கள் இருந்த திசை நோக்கி தூக்கி வீசப்பட்டது.
முதலாவது கார் விபத்துக்குள்ளான போதே மக்கள் அவ்விடத்தை விட்டு சென்றிருந்தனர். சிறிய அளவிலானோர் மட்டுமே அவ்விடத்தில் இருந்துள்ளனர். முதல் கார் விபத்துக்குள்ளான போது இருந்த கூட்டம் இருந்திருந்தால் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
மேலும் முதலாவது கார் விபத்துக்குள்ளான போது தூசி அதிகரித்த நிலையில் பந்தையத்தை உடனடியாக நிறுத்துமாறு பல தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ட்ரெக் மார்ஷல்கள் அதனை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.
பொதுவாக தூசி அதிகரித்தால் வீதியை நனைத்து தூசியை குறைக்கும் பணி மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் விபத்தின் பின்னரே வீதியை நனைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |