மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை : தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் இன்று (09.10) கூடியது.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\
பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வன்னியின் மூன்று மாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை (10.10) இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிய முடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை.
பத்திரிகைகள் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது.
அவ்வாறான நிலமை ஏற்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது.
இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது.
அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது. தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
You may like this....