நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற இப்தார் விசேட தொழுகை நிகழ்வுகள் (Video)
இஸ்லாமிய மக்கள் இன்றையதினம் புனித நோன்புப் பெருநாளைக்
கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப்
பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் புனித ரமழான் தின துவாப்பிரார்த்தனை நிகழ்வுகளை அனைத்து பள்ளிவாசல்களிலும், முக்கிய பல இடங்களிலும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் யாழ். ஒஸ்மானியக்கல்லூரியின் திறந்த மைதானத்தில் புனித ரமழான் தின துவாப்பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இந்த துவாப்பிரார்த்தனையும் குப்த பிரசங்கத்தினையும் மௌலவி எ.எச்.ரகீம் தலைமையில் நடாத்தி வைக்கப்பட்டது.
இதில் யாழின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த இஸ்லாமிய மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தி - கஜி
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றையதினம் காலை 8 மணியளவில் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
காலை 7 மணிக்குப் பெண்களுக்கும் காலை 8 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. குறித்த பெருநாள் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது நோன்பு பெரு நாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அமைதியான முறையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - ஆசிக்
மலையகம்
மலையகத்தில் முஸ்லிம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுபட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
ஹட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி ஷாஜகான் தலைமையில் இடம்பெற்ற விசேட ரமழான் தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஹட்டன் முஸ்லிம் வாழ் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
பிறகு தமது பண்டிகையை முஸ்லிம் மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடியதைக் காணக்கூடியதாக இருந்தது.
செய்தி - திருமால்
வவுனியா
இஸ்லாமியர்களின் விசேட தினமான இப்பதார் நிகழ்வின் விசேட தொழுகை வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.
பள்ளிவாசலின் இமாம் அமீர் உல்ஹாவிஸ்சினால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை வவுனியா தவ்கீத் ஜமாத் பள்ளிவாசலிலும் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.
அஸ்ஸேக்தஸ்னீம் தைமியினால் விசேட தொகை நடத்தப்பட்டதுடன், இதன்போது பெருந்திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த தொழுகை முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவிருந்த போதிலும் மழை நீர் தேங்கியிருந்தமையினால் தவ்கீத் ஜமாத் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
செய்தி - கோகுலன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை இடம்பெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையையும் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனி நடாத்தி வைத்தார். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை கடந்த கால கோவிட் தொற்று மற்றும் நாடு முடக்கப்பட்டதன் காரணமாகக் கடந்த 3 வருடங்களின் பின்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - குமார்
[



