‘‘வரவுசெலவுத்திட்டத்தில் எமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்துவோம்’’
இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றைய தினமும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்.
200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் நாளை மறுதினம் முதல் மீளத்திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்கள் தொடர்ந்தும் 100ஆவது நாளாக இன்றும் இணையவழி ஊடான கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பின்னணியிலேயே நாளை மறுதினம் பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறும், நாளை மறுதினம் பாடசாலைகளுக்குத் திரும்பும் படியும் பொலிஸாரினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மேலும் ஆசிரியர்களின் போராட்டங்களை நிறுத்தச் சொல்லியும், அவர்களை பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் திரும்புவதற்கான அழுத்தங்களை மேற்கொள்ளவும் பொலிஸ் நிலையங்களுக்கு மேலிடத்திலிருந்து விசேட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பொலிஸார் தொலைபேசி ஊடாக பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் சமூகமளிப்பீர்களா இல்லையா என்று கேட்கின்றனர். 21ஆம் திகதி எவரும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கமாட்டார்கள்.
21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாம் எமது வேலை நிறுத்தத்தை தொடர்வோம். வருகின்ற 25 ஆம் திகதி முதல் ஆசிரியர்களும், அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள். அன்று முதல் தினமும் கற்றல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதோடு ஆர்பாட்டங்களையும் செய்வார்கள்.
நவம்பரில் வரவு செலவுத்திட்டத்தில் எமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அதன்
பின்னர் பாரிய போராட்டங்களையும் நாம் நடத்துவோம். தேர்தல் காலத்தில் தேர்தல்
பணிகளையும் நிராகரிக்கவும் உத்தேசித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
