ஓட்டமாவடியில் 90 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 90 அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் மற்றும் வீதிகளில் சுகாதார நடைமுறையை பேணாமல் முகக் கவசம் அணியாதவர்கள் என எழுமாறாக 90 பேருக்குச் செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.நௌபர் வழிகாட்டலில் வீதிகளில் மற்றும் பேருந்துகளில் சுகாதார நடைமுறையைப் பேணாமல் முகக் கவசம் அணியாது பயணிக்கும் நபர்களைப் பிடித்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதனை தடுக்கும் நோக்கில் பிரதேச செயலகம், பிரதேசசபை, இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதார தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக வீதிகளில் சுகாதார நடைமுறையைப் பேணாமல் முகக் கவசம் அணியாது பயணிக்கும் நபர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.





