இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் தொடர்பில் விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித நுகர்வுக்கு ஏற்ற தரங்களுக்கு அமைவாக ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்களின் தயாரிப்பு மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐஸ்கிரீம்களின் தரம்
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக ஐஸ்கிரீம் உள்ளிட்ட சந்தையிலுள்ள உணவுப் பொருட்களைப் பரிசோதிக்கும் வேலைத்திட்டமொன்றை சுகாதார அமைச்சும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரமற்ற உணவுப் பொருட்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க இலங்கை உணவுச் சட்டம் மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) SLS 223:2017 தரத்திற்கமைய, 'ஐஸ்கிரீம்' என விற்பனை செய்யப்படும் தயாரிப்புகளில் குறிப்பிட்டளவு பால் கொழுப்பு உள்ளடங்கியிருப்பது கட்டாயமாகும்.
ஏமாற்றப்படும் நுகர்வோர்
உரிய பால் கொழுப்பு இன்றி தாவரக் கொழுப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை 'ஐஸ்கிரீம்' என விற்பனை செய்யக்கூடாது எனவும், அதற்குப் பதிலாக அவற்றை 'உறைந்த இனிப்புப் பண்டம்' என முறையாகப் பெயரிட்டு விற்பனை செய்ய வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியமிக்கப்பட்ட தரங்களைப் பூர்த்தி செய்யத் தவறும் தயாரிப்புகளை அடையாளம் காண்பதும், தவறான லேபிளிடல் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதும் இந்தப் பரிசோதனைகளின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஐஸ்கிரீம் தயாரிப்புகளின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்கள் குறித்து எழுந்துள்ள கரிசனைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam