சிங்கப்பூர் செல்லும் வரை கோட்டாபயவிடம் பேசினேன் - ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் நிதி நெருக்கடி பற்றிய உண்மைகளை நாட்டின் முன்னைய நிர்வாகம் மூடிமறைத்துள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் உண்மையைச் சொல்லவில்லை எனவும் இலங்கை திவால் நிலையை அடைந்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிஎன்என் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
பதில் ஜனாதிபதி ஆன பின்னர் சிஎன்என் உடனான ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பேட்டி சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த முதல் பேட்டியாகும்.
சிங்கப்பூர் செல்லும் வரை கோட்டாபயவுடன் பேசினேன்
கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு தப்பிச் சென்றது முதல், சிங்கப்பூர் சென்றது வரை அவருடன் பேசியதாக விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி இன்னும் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று விக்ரமசிங்க கூறினார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக விக்ரமசிங்க இப்போது போட்டியிடுகிறார், நாடாளுமன்றம் புதன்கிழமை புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ளது. தனது எரிக்கப்பட்ட வீடு மற்றும் அதிலிருந்த பெரும்பாலானவை மீட்க முடியாதவை என்று கூறினார்.
4,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை இழந்துள்ளதாகவும், அவற்றில் சில நூற்றாண்டுகள் பழமையானவை என்று ரணில் விக்ரமசிங்க கூறினார். 125 ஆண்டுகள் பழமையான பியானோவும் தீயில் எரிந்து நாசமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றவர்கள் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை
நான் ஒரே மாதிரி இல்லை, மக்களுக்கு அது தெரியும் என்று அவர் கூறினார். பொருளாதாரத்தை கையாள நான் இங்கு வந்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடப்பதை நான் விரும்பவில்லை. மற்றவர்கள் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.
எரிபொருள் வாங்கும் நம்பிக்கையில் மக்கள் பல மணிநேரம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள். பல உள்ளூர் வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. பல்பொருள் அங்காடிகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
கோபம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று விக்ரமசிங்க கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கடமையை நிறைவேற்றுவதற்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.