தொலைபேசியில் சம்பந்தனை அழைத்த ரணில்! வீடு தேடிச் சென்ற சஜித்
இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் ஆதரவை நாடும் வேட்பாளர்கள்..
இந்த நிலையில், நாளையதினம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேர்தல் களத்தில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், தங்களுக்கு ஆதரவு கோரி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட வகையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் சம்பந்தன் அறிவித்துள்ளார்.
சம்பந்தனை நேரில் சந்தித்த சஜித்
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்றைய [18.07. தினம் மாலை சம்பந்தனின் வீட்டுக்கு நேரில் சென்று சம்பந்தனோடு கலந்துரையாடி தமது ஆதரவினைக் கேட்டுக் கொண்டதாக அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரியப்படுத்தியுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறு சஜித் பிரேமதாச சம்பந்தனின் வீட்டுக்குச் சென்று சம்பந்தனுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தனின் வீட்டுக்கு சஜித் வருகைத் தந்த போது அங்கு குழுமியிருந்த உறுப்பினர்களில் சாணக்கியன் மட்டும் எழுந்து நின்றார் எனவும் ஏனைய உறுப்பினர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை என்றும் அந்த உறுப்பினர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன், சுமந்திரன், சஜித் தரப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சஜித் வரும்போது எழுந்திருக்கவில்லை, சுமந்திரன் எப்போதும் இடத்திற்கு இடம் மாறி மாறி நடந்து கொள்வார் எனவும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ரணிலை அகற்ற கூறும் அமெரிக்கா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது . இதன்போது கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகையில்,
தற்போதைய பதவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், ரணிலை விலகச் சொல்லி கேட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் எனவும், எனினும் அவரது பேச்சை எவரும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கணக்கில் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேநேரம், சஜித்திற்கும், டலஸூக்கும் வாக்களிப்பதை யாரும் கூட்டத்தில் நியாயப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை தொடர்பில் கூட்டத்தில் சாணக்கியன் பேசிய போது, நான் கூறினேன், போராட்டக்காரர்களின் கோசம் தேசிய அரசு என்பது. எனினும் தேசிய அரசைப் பற்றி நாங்கள் யோசிக்கத் தேவையில்லை. நாங்கள் வடக்கு கிழக்கை மாத்திரம் தான் யோசிக்க வேண்டும். வடக்கு கிழக்கு பிரச்சினைகளை இந்த வேட்பாளர்கள் தீர்க்க முன்வருவார்களா என்பதைப் பற்றித் தான் நாங்கள் சிந்திக்க வேண்டும் என கூறினேன்.
அத்துடன், போராட்டக் குழுக்களின் பின்னால் வேறு நாடுகள் இருந்ததாக நான் கூறினேன். அதற்கு சுமந்திரன் “நான் அறிந்த வரையில் யாரும் போராட்டக்காரர்களின் பின்னால் இல்லை” என்று தெரிவித்தார். எனினும் போராட்டக்காரர்களின் பின்னால் வேறு நாடுகள் இருப்பது என்பதை நான் அறிவேன்.
சுமந்திரன், சஜித் தரப்புக்கு வாக்குக் கொடுத்துள்ளார் என்று நினைக்கின்றோம், கட்சியில் அனைவருக்கும் இது தெரியும். ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருப்பவர்கள் மத்தியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் தரப்புக்கு ஆதரவு வழங்கும் என்ற கதை ஒன்று உள்ளது. மற்றையவர்களுக்கு தெரியும் சுமந்திரனை நம்பி பிரயோஜனம் இல்லை என்று.
யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. வாக்களிப்பதால் எங்ளுக்கு வரும் பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இப்படியான கதைகள் வரும்போது சுமந்திரன் எதுவும் கதைக்கின்றார் இல்லை. அவருக்கு தேவை இந்த போராட்டக் குழு கதையும், ரணில் வெற்றிப் பெறக்கூடாது என்பதில் பலர் தன்னை நம்பியிருக்கின்றார்கள் என்ற கதையுமே அவருக்கு தேவை. ரணில் வெற்றிப் பெறக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தன்னிடம் தெரிவித்ததாக சுமந்திரன் ஒரு கதை கூறுகின்றார்.
சஜித்தும், டலஸூம் சேர்ந்து கேட்டால் கூட, டலஸ் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர். அவருடன் விமல், கம்மன்பில எல்லோரும் இருக்கின்றார்கள் எனில் அவர்கள் எப்படி எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.
இதன்போது, சிறிதரன், கம்மன்பில போன்றோரை நாங்கள் தனியாட்களாக பார்க்க முடியாது. அவர்களின் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் நன்றாக எடுபடும் என கூறினார் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உறுதிப்படுத்தினார்.
You My Like This Video