சுன்னாகம் வாள்வெட்டு வழக்கு! தனக்கு எவ்வித தொடர்புமில்லை என்கிறார் சுகாஷ் (video)
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமைக்கும், தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று (26.01.2023) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சுன்னாகத்தில் நடைபெற்ற மிலேச்சத்தனமான வாள்வெட்டு வழக்கிலே குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் என் ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்ட திட்டமிட்ட பொய்யை எண்ணி நான் வருந்துகின்றேன்.
ஊடகவியல்
பல ஊடகவியலாளர்களால் ஊடகத்துறை நிமிர்ந்து நிற்கின்றது. தமிழ் தேசியத்திற்கு வலுவூட்டும் ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக தமிழ் தேசியவாதிகளால் பார்க்கப்பட்டது ஊடகவியல்.
தேர்தல் காலத்திலே திட்டமிட்ட வகையிலே சில ஊடகங்களிலே பொய்யான செய்திகளை தங்களுடைய நலன்களுக்காகவும், தங்களுடைய நிகழ்ச்சிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வெளியிட்டு வருவது வேதனையான விடயம் இது கண்டிக்கப்பட வேண்டியது, நிறுத்தப்பட வேண்டியது, தமிழ் தேசியத்தை சிதைக்க கூடியது, தமிழ் தேசியத்தை சிதைக்கின்ற செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூக பிரச்சிணைகளுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணிகள்
சமூகப் பரப்பில் சில வழக்குகளை மோசமான வழக்குகளாக பார்த்தார்கள். இருப்பினும் சட்டத்தரணிகள் முன்னிலையாவது வழக்கமான விடயமாகும்.
இந்நிலையில் சட்டத்தரணியின் பெயரை குறிப்பிடாது சட்டத்தரணி முன்னிலையாகினார் என்ற செய்திகளே ஊடகங்களில் வழமையாக பிரசுரமாகும் நிலை காணப்படுகையில் நான் முன்னிலையாகாத வழக்கிற்கு எனது பெயரையும், கட்சியின் பெயரையும் இணைத்து முன்னிலையானேன் என்று பொய்யான செய்தியை வெளியிட்டமையானது வேதனைக்குறிய விடயமாகும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர மிகுதி அனைத்து கட்சிகளும் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்பதற்கு உடன்பட்டு உள்ள நிலையில் தமிழ் மக்களினுடைய சமஸ்டியை வலியுறுத்துகின்ற ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே செயல்படுகின்றது.
வெளிநாடுகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துப்போகாது உள்ள கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தொட்டுப் பார்க்க முடியாத சில தரப்புகள் நம்மளுடைய பொய்யான செய்திகள் வெளியிட்டு எமக்கு அபகீர்த்தி ஏற்படுத்து முகமாக எமக்கு எதிராக செய்தி வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.