கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் அதிரடியாக கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 86 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் மூன்று இலங்கை விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் டுபாயில் இருந்து பிட்ஸ் எயார் (Fits Air) நிறுவனத்திற்கு சொந்தமான 8D-822 என்ற இலக்க விமானத்திலும், அதிகாலை 01.00 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து எயார் ஏசியா (Air Asia) நிறுவனத்திற்கு சொந்தமான FD-140 என்ற இலக்க விமானத்திலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு
பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் 'பசுமை வழித்தடம்' (Green Channel) பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான வர்த்தகர் எனவும், மற்றைய இருவரும் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் வர்த்தகர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு பெண்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் காண்பிப்பதற்காக சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டு மற்றைய பெண்ணால் தள்ளிக்கொண்டு விமான நிலைய "பசுமை வழித்தடம்" ஊடாகச் செல்லும் போது, அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த சுங்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள் விசாரணை
இவர்களின் பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "மென்செஸ்டர்" (Manchester) ரக சிகரெட்டுகள் 44,000 அடங்கிய 220 சிகரெட் பெட்டிகள் (Cartons), 19 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியின்றி அழகுக்கலைக்கு பயன்படுத்தப்படும் 430 கொலாஜன் (Collagen) பக்கற்கள், காலணிகள் மற்றும் வர்த்தகப் பொருட்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam