பொய்யாக வாக்குறுதிகளை வழங்க நான் விரும்பவில்லை: யாழில் நாமல் வெளிப்படை பேச்சு
பொய்யாக வாக்குறுதிகளை வழங்க நான் விரும்பவில்லை எனவும், 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களுடன் கலந்தாலோசித்து, அது குறித்து நன்றாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
13ஆம் திருத்தச் சட்டம்
''இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்த எவரும் தேர்தலை நடத்தவில்லை. எனவே பொய்யாக வாக்குறுதிகளை வழங்க நான் விரும்பவில்லை.
13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டு மக்களுடன் கலந்தாலோசித்து, அது குறித்து நன்றாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
மாறாக தேர்தல் காலத்தில் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாக பொய் வாக்குறுதிகளை அளிப்பதில் எவ்வித பயனும் இல்லை.
தேர்தலின் பின்னர் இது குறித்து அவதானம் செலுத்த முடியும். நான் நிச்சயமாக தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாப்பேன்.
அனைத்து நலன்கள்
தெற்கில் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நலன்களையும் நான் வடக்கு கிழக்கு பிள்ளைகளுக்கும் கிடைக்கச் செய்வேன்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசு சேவை உள்ளிட்ட சேவைகளை ஏனைய மாகாணங்களைப் போன்று யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி ஏற்படுத்த வேண்டும் என கருதுகின்றேன்.
மக்கள் நல்ல ஆக்கத்திறன் படைத்தவர்கள் யாழ்ப்பாணத்தை ஆக்கத்திறன் மையமாக உருவாக்க வேண்டும். அதிகளவான மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இலங்கையில் விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் வடக்கில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரம் காரணமாக இன்று அனைத்து வேட்பாளர்களும் இங்கு வந்து பிரசாரம் செய்வதற்கு முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |