துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட நீதி கோரிய போராட்டம் நிறைவு
துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டவரை சந்தித்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லத்தம்பி திலகநாதன் சந்தித்து கலந்துரையாடி போராட்டத்தை நிறைவுறுத்தி வைத்தார்.
நேற்று முன்தினம் (11.08.2025) காலை 6 கோரிக்கைகளை முன்வைத்து நீதி கோரி துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக குடும்பஸ்தர் ஒருவர் உணவொருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும். பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பல்வேறு கோரிக்கைகள்
இதனிடையே நேற்று முன்தினம் காலை தொடங்கிய போராட்டம், நள்ளிரவு தாண்டி நேற்று பிற்பகல் வரை இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லத்தம்பி திலகநாதன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகை தந்து, துணுக்காய் பிரதேச செயலாளருடன் கலந்தாலோசித்துவிட்டு மாவட்ட செயலாளருடனும் உரையாடிவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் நபரை பிரதேச செயலாளருடன் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த நபரின் கோரிக்கைகளுக்கான விசாரணைகள் மாவட்ட செயலாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான தீர்வுகள் தங்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதிமொளிக்கமையவும் உண்ணாவிரதம் இருந்த நபருக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரால் பழச்சாறு வழங்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







