மூன்று நாடுகளுக்கு பணி விசா வழங்க தடை விதித்த ஹங்கேரி - புதிய அரசு அதிரடி நடவடிக்கை
பிலிப்பைன்ஸ், ஜோர்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணி விசா வழங்குவதை ஹங்கேரி அரசு வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கை இது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிரதமர் பீட்டர் மக்யார் தலைமையிலான புதிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கான விசா விநியோகத்தை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது.
இறக்குமதி நடவடிக்கை
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகையால் உள்ளூர் மக்களின் ஊதியம் குறைவதாகக் கூறி, இந்த கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இந்த மூன்று நாடுகளிலிருந்து எளிமையான முறையில் தொழிலாளர்களை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாணை வெள்ளிக்கிழமை முதல் மாற்றியமைக்கப்படுகிறது.
இருப்பினும், ஏற்கனவே ஹங்கேரியில் இருக்கும் தொழிலாளர்கள் தங்களின் விசா காலத்தை நீட்டிக்க விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரியின் ஒட்டுமொத்த உழைப்பாளர்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 2 சதவீதம் மட்டுமே என்றாலும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இவர்களை பெரிதும் நம்பியுள்ளன.
இதனால், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகையை முழுமையாக முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தையும், பெருநிறுவனங்களையும் பாதிக்கும் என ஹங்கேரியின் முக்கிய முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.