இண்டிகோ விமான நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து
புதிய அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப விமானப் பணியாளர்களின் பணி அட்டவணையில் போதுமான மாற்றங்களைச் செய்யத் தவறியதால், இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் இந்தியா முழுவதும் இந்த வாரம் நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது.
இதன் விளைவாக, பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த மேதா க்ஷீர்சாகர் மற்றும் ஒடிசாவின் புவனேஷ்வரைச் சேர்ந்த சங்கமா தாஸ் ஆகிய மென்பொருள் பொறியியலாளர்கள், இண்டிகோ விமான இரத்து காரணமாகத் தங்கள் சொந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போன ஓர் எதிர்பாராத சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி புவனேஷ்வரில் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு, கடந்த டிசம்பர் 3ஆம் திகதி ஹூப்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.
பணிநேர வரம்பு விதிமுறை
விமானிகள் பற்றாக்குறை மற்றும் பணியிட நேர வரம்பு விதிமுறை மாற்றம் காரணமாக, டிசம்பர் 2 ஆம் திகதிக்கான இவர்களது விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி, இறுதியாக டிசம்பர் 3ஆம் திகதியன்று இரத்து செய்யப்பட்டன.

இதனால் தம்பதியினர் புவனேஷ்வரிலேயே சிக்கிக்கொண்டனர். கடைசி நிமிடத்தில் நிகழ்வை இரத்து செய்ய முடியாததால், பெற்றோர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து சடங்குகளைச் செய்தனர்.
புதுமணத் தம்பதியினர் புவனேஷ்வரில் இருந்து திருமண அலங்காரத்துடன் காணொளி வாயிலாக வரவேற்பில் கலந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில் விமானச் செயல்பாட்டுத் தடங்கல்களுக்கு, பணியிட நேர வரம்பு விதிகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தவறான திட்டமிடலே காரணம் என்று இண்டிகோ ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், டிசம்பர் 8ஆம் திகதி வரை கூடுதல் விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதிக்குள் நிலைமை சீராகும் என்றும் இந்திய விமானப் போக்குவரத்து அதிகார சபையிடம் இண்டிகோ தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |