மனித உரிமைகளை குறுகிய எல்லைக்குள் முடக்கவே கூடாது! எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு
மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாசார உரிமைகள், காணிக்கான உரிமை, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகளையும் இணைத்து விரிவான பொருள்கோடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு JDA Perera கலைக்கூடத்தில் 'Social Justice Commission' அமைப்பினால் நடத்தப்பட்ட "Act Now" திட்டத்தின் இரண்டாம் கட்டமான "UNCOVER" புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை கதைகள்
இந்த கண்காட்சியானது, இலங்கையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளைப் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகள் ஊடாகப் பார்வையாளர்களுக்கு முன்வைத்துள்ளது.

பல்வேறு சமூக குழுக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அநீதிகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்த்து, உணர்வுபூர்வமான உரையாடலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
"Act Now திட்டத்தின் மூலம் நமது நாட்டில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த சமூகத் துன்பியல் சம்பவங்கள் குறித்தும், பல்வேறு பிரதேசங்களில் உரிமைகளை இழந்த மக்களுக்காகவும் முக்கியமான முன்வைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்ட மக்கள், மலையக மக்கள், வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தெற்கில் பல்வேறு துன்பியல் சம்பவங்களால் அழுத்தங்களுக்கு உள்ளான மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மீண்டும் பேசுபொருளுக்கு உட்படுத்தும் இத்தகைய முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு புதிய பொருள்கோடல் வழங்கப்பட்டு இந்தப் பரப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு நாட்டின் இளைஞர் சமூகம் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.




