பொருளாதார நெருக்கடியை விட மனித உரிமை பேரவையின் சர்வதேச நெருக்கடி பயங்கரமானது
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது புதல்வர் தஹாம் சிறிசேனவுடன் கலந்துக்கொண்டார். இது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் கலந்துக்கொண்ட முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டமாகும்.
மைத்திரிக்கு கொழும்பில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்பு
மைத்திரிபால சிறிசேன பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள சென்று நியூயோர்கில் ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு கொழும்பில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டது. சேர் உங்களது புதல்வருக்கு எதிராக ஆங்கில பத்திரிகை ஒன்றில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது என தொலைபேசி அழைப்பை எடுத்தவர் கூறினார்.
இதனால், குழப்பமடைந்த மைத்திரி, இணையத்தளத்தில் அந்த பத்திரிகையை பார்த்து விட்டு, தனக்கு அதன் பிரதியை அனுப்புமாறு கூறினார்.
“தஹாம் ஐ.நாவில் என்ன செய்கிறார். ஜனாதிபதி சிறிசேன இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.மகிந்த தனது புதல்வர்களை ஐக்கிய நாடுகள் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை நியாயப்படுத்த முடியது என்பதே எங்களது நிலைப்பாடாக நாங்கள் கருதுகிறோம்.
மைத்திரியுடன் அவரது புதல்வர் தஹாம் சிறிசேன, ஐக்கிய நாடுகளுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. தஹாம் சிறிசேனவின் இந்த விஜயம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன” என கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியான ஒரு ஆஙகில பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
லண்டனில் ஜனாதிபதி ரணிலுடன் தோன்றிய மைத்துனர் ருவான் விஜேவர்தன
இது 2022 ஒக்டோபர். ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக லண்டன் சென்றார். மைத்திரியுடன் ஐ.நா கூட்டத்தில் அவரது புதல்வர் தஹாம் சிறிசேன தோன்றியது போல், லண்டனில் ரணில் விக்ரமசிங்கவின் மைத்துனரும் குறித்த ஆங்கில பத்திரிகையின் உரிமையாளருமான ருவான் விஜேவர்தன தோன்றினார்.
எனினும் அந்த பத்திரிகை அது பற்றி விமர்சிக்கவில்லை. எனினும் சமூக ஊடகங்கள் விமர்சித்தன. மகிந்தவை போன்ற குடும்பமாக பயணம் செல்கின்றனர் என விமர்சிக்கப்பட்டது.
இலங்கையில் பிள்ளைகள் உண்ண உணவின்றி பட்டினியில் இறப்பதாக தற்போது முழு உலகிலும் இலங்கை தொடர்பாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.இலங்கையில் உணவு நெருக்கடி இருப்பதாக ரணிலின் அரசாங்கம் முழு உலகத்திற்கும் கூறுகிறது.நெருக்கடியை தீர்க்க உதவுமாறு உலக வங்கி,ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றிடம் கெஞ்சிகிறது.
நிலைமை இப்படி இருக்கும் போது குடும்பத்துடன் மகாராணியின் இறுதிச் சடங்கிற்கு சென்றுள்ளனர். இலங்கையை அனுதாபத்துடன் நோக்கும் உலக சமூகம் இது பற்றி என்ன நினைக்கின்றதோ தெரியாது.
மன்னருடன் உரையாடும் போது இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டு வந்த பயங்கரமான யோசனை
மறுபுறம் தற்போது பிரித்தானியாவின் அரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள சார்லஸூக்கோ, அரச குடும்பத்திற்கோ இலங்கைக்கு எதுவும் செய்து விட முடியாது. ரணில் விக்ரமசிங்க, மன்னர் சார்லஸூன் கதைத்து கொண்டிருக்கும் போது, மன்னரை பராமரிக்கும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யோசனையை முன்வைக்க தயாராகி வந்தது.
இது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரமான யோசனை என்பதுடன் இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக தடைவிதிக்க வேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்த யோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் இலங்கைக்கு எதிராக இப்படியான பயங்கரமான யோசனை முன்வைக்கப்படவில்லை.
ரணில் விக்ரமசிங்க உண்மையில் செல்வதாக இருந்திருந்தால், மகாராணியின் இறுதிச் சடங்கிற்கு அல்ல ஜெனிவாவுக்கே சென்றிருக்க வேண்டும். ஜெனிவாவுக்கு சென்று யோசனை தடுப்பதற்கோ அல்லது அதன் கடுமையை குறைக்கவோ முயற்சித்திருக்க வேண்டும்.
போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களுக்காக மாத்திரம் இந்த யோசனை கொண்டு வரப்படவில்லை.ஈஸ்டர் தாக்குதல், ரணில் அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி போராட்டத்தை அடக்கியமைக்கு எதிராக இந்த யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு பதிலளிக்க ரணில் அரசாங்கம் அனுப்பிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி,விஜயதாச ராஜபக்ச ஆகியோர் யோசனை தொடர்பில் எந்த பதிலை முன்வைக்காது கடந்து சென்றனர். அலி சப்றி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சென்றார்.
எலிசபெத் மகாராணி மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே ஆகியோரின் மரணச் சடங்குகளுக்கு செல்வதை விட ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சென்று இலங்கை தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியை முழு உலகமும் கேட்கும்படி கூறியிருந்தால், இலங்கை குறித்து உலகத்தின் கவனம் திரும்பி இருக்கும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சென்று வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காது போனால், அது தனக்கு மரியாதை குறைவாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்திற்கு செல்லவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் யோசனை பயங்கரமானது
மகாராணியின் இறுதிச் சடங்கிற்கு செல்லும் அனைத்து அரச தலைவர்களை பொதுவாக மன்னர் சார்லஸ் சந்திப்பர் என்பது ரணிலுக்கு தெரியும். ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கிற்கு செல்லும் உலக தலைவர்களை ஜப்பான் பிரதமர் சந்திக்க உள்ளார்.
ஆனால், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அப்படி நடக்காது. போராட்டங்களை பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை பயன்படுத்தி அடக்கும் அரச தலைவர்களை உலகில் பலமிக்க நாடுகளின் தலைவர்கள் சந்திக்க விரும்ப மாட்டார்கள். இதுதான் உண்மையான நிலவரம்.
பொதுச் சந்திப்பில் மன்னர் சார்லஸை சந்தித்து ஓரிரு வார்த்தைகளை பேசுவதால், இலங்கை்ககு எந்த நன்மையும் கிடைக்காது. சார்லஸ் இளவரசராக இருந்த போது கடந்த 1997 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ள வந்திருந்தார்.
மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டத்திற்கும் வந்திருந்தார். மகாராணி தனிப்பட்ட ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்திருந்தார்.
இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நெருக்கடியில் சிக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியை விட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உருவாக்கியுள்ள சர்வதேச நெருக்கடி மிகவும் பயங்கரமானது. இந்த நெருக்கடிகளை தீர்க்காது மரணச் சடங்குகளுக்கு செல்வதால், நன்றி என்ற வார்த்தை மாத்திரமே கிடைக்கும்.
கட்டுரையாளர்-உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம்- ஸ்டீபன் மாணிக்கம்