நிலக்கரி டெண்டரில் மாபெரும் மோசடி! முன்னிலை சோசலிசக் கட்சி குற்றச்சாட்டு
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கான டெண்டரில் மாபெரும் மோசடியொன்று நடைபெற்றிருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி கட்சியின் பிரமுகர் புபுது ஜயகொட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (28) பொலன்னறுவையில் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி டெண்டரில் பங்குபற்றுவதற்காக குறித்த நிறுவனத்தின் கையிருப்பில் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன்நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும் என்பது முன்னைய விதியாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த விதியைத் தளர்த்தி ஒரு லட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி கையிருப்பில் உள்ள நிறுவனங்களும் டெண்டரில் கலந்து கொள்ள வழிசெய்துள்ளது.
அவ்வாறான மோசடியான திருத்தம் மூலமாக இம்முறை நிலக்கரி டெண்டர் Trident Chemphar எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளர் சரந்சந்திர ரெட்டி என்பவர் 2022ம் ஆண்டு புதுடில்லியில் மதுபான மோசடி குற்றச்சாட்டொன்றில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மோசடி
Trident Chemphar நிறுவனத்தின் இலங்கை முகவரான சரத்பண்டார ஜயசுந்தர, கிரிக்கட் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் சிககி கடந்த 2019ம் ஆண்டு ஏழு வருடங்களுக்கான போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு 30 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை சதொசவுக்கு வழங்கும் டெண்டரில் முறைகேடு செய்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு மோசடியான நிறுவனத்திற்கு நிலக்கரி டெண்டரை வழங்குவதற்கான அதன் விதிகளைத் தளர்த்தி மாபெரும் மோசடியொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



