HSBC வங்கியின் திடீர் தீர்மானம்.. முன்னாள் நிதியமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை
இலங்கையில் HSBC வங்கியின் உலகளாவிய சேவை மையத்தை மூடும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
HSBC நிறுவனத்தின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், இந்த நடவடிக்கையால் 1,659 ஊழியர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர பேச்சுவார்த்தை
2004ஆம் ஆண்டு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட HSBC சேவை மையத்தில் ஒரு காலகட்டத்தில் சுமார் 4,500 இலங்கையர்கள் பணியாற்றியுள்ளனர்.

உலகளாவிய செயற்பாட்டு முறைமையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இலங்கை மையத்தை இடமாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளதாக HSBC தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை இறுதிப்படுத்துவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், HSBC மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்தி மாற்றுத் தீர்வுகளை ஆராய வேண்டும் என ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது தேசியப் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.