ஜனாதிபதி மாளிகையை அனுமதி இல்லாமல் எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியும்: சுமந்திரன் கேள்வி
பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐனாதிபதி மாளிகை கட்டடத்தை உரிய நடைமுறைகள் அனுமதிகள் பெறப்படாது எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நேற்று (26.10.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஐனாதிபதியின் இந்தச் செயற்பாடு முழுக்க முழுக்க தவறு. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலையில் கட்டப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை உரியமுறையில் அனுமதிகள் நடைமுறைகள் பின்பற்றப்படாது கட்டப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் குழப்பம்
குறித்த காணிகள் பொது மக்களுக்கு சொந்தமாகவும் உள்ளது. அவ்வாறான நிலையில் பொதுமக்களுக்கு அறிவிக்காது காணிகளை அடையாளம் காணாது , எவ்வாறு கையகப்படுத்த முடியும்? முறையாக காணிகள் அளவிடுகள் செய்யப்படவில்லை.
அவ்வாறான நிலையில் எவ்வாறு தனியாருக்கு ஜனாதிபதி மாளிகை எனக் கூறப்படும் கட்டடத்தை வழங்க முடியும்.
குறித்த விடயம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை புலம்பெயர் முதலிட்டாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல் ஏற்படுத்தக்கூடும்.
விசேட கூட்டம்
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வட மாகாணசபை அமர்வுகள் இடம்பெற்ற காலத்திலேயே இக்கட்டடம் வடக்கு மாகாண சபைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஏகமனதான தீர்மானம் எடுக்கப்பட்டு அவை உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
அதேநேரம் மாகாண சபைக்கு வழங்காவிட்டாலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இதனை வழங்க கேரியிருந்தோம். ஆனாலும் இவை எவையும் பின்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு அறிவிக்காது எவ்வாறு
இதனை நடைமுறைப்படுத்த முடியும் என அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட எனைய
உறுப்பினர்களாலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் அரசல் புரசலாக இடம்பெற்றுள்ளமை போலவுள்ளதால் இதனை பார்வையிட்டு ஐனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவுகளை அறிவிப்போம். இது சம்பந்தமாக ஆராய விசேட கூட்டமொன்றையும் கூட்டுவோம் என தெரிவித்துள்ளார்.