நீதிமன்றின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்தது..! சஜித் கேள்வி
22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
22வது அரசியலமைப்புத் திருத்தம்
22வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் நீதித்துறைத் திருத்தச் சட்டமூலத்தையும் ஒன்றாகவே பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்படுவதுடன், சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீடு மற்றும் சமநிலை முறையும் சீர்குலையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் 3, 4, 83 மற்றும் 107 ஆகிய பிரிவுகளுடன் 22வது திருத்தத்தைப் பரிசீலிக்கும்போது, இது மக்களின் இறையாண்மையை பாதிக்குமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகலாம் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குற்றம்சாட்டிய அவர், மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டப் பேரணியில் இணைந்து ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.