மட்டக்களப்பில் உரிமையாளர்கள் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் : 30 நாட்கள் காலக்கெடு
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நேற்று (06.02.2024) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
வீடமைப்பு அதிகார சபை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு, பிரதேச செயலாளர் உள்ளிட்ட திணைக்களங்கள் ஊடாக காணிகள் வழங்கப்பட்டு வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.
ஓய்வு விடுதிகள்
இதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பல வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் அந்த வீடுகளை ஓய்வு விடுதிகளாக பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் வீடுகள் இல்லாத எத்தனையோ குடும்பங்கள் வீடு கேட்டு அலைந்து திரிகின்றனர்.
சமூக சீரழிவுகள்
இந்நிலையில் கிராம சேவகரின் உதவியுடன் குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகளுக்கு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு பதினைந்து நாட்களுக்குள் உரிமையாளர் வராத வீடுகளை கையகப்படுத்தி வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர் பற்று காமாட்சி கிராமம், மங்களகம் போன்ற இடங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளில் பல வீடுகள் குடியிருப்பாளர்கள் இன்றி பாழடைந்த நிலையில் காணப்படுவதாக கிராம சேவையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக சமூக சீரழிவுகள் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |