ஊடகவியலாளர்களின் நெறிமுறைகளுக்கு ஆதாரமாகும் இந்திரஜித்தின் நூல் : ஆளுநர் புகழாரம்
ஊடகவியலாளர்களின் நெறிமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற நூலை ஒரு தமிழ் ஊடகவியலாளர் முதன்முறையாக பிற மொழியில் வெளியிட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் எழுதிய மாத்ய மக ( ஊடக பாதை) சிங்கள மொழியிலான புத்தக வெளியீட்டு விழா கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(06.02.2024) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளரான இந்திரஜித் சிறந்த திறமையுடன் பல நிறுவனங்களில் அவரின் பெயரை நிலைநிறுத்தியவராவார்.
இலங்கை வரலாற்றில் ஒரு தமிழ் ஊடகவியலாளர் சிங்களமொழியில் புத்தகத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல்முறை என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வி்ல் பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் , நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் முதுநபீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் , ஐபிசி தமிழ்,லங்காசிறி ஊடக வலையமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கந்தையா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.