நாடளாவிய ரீதியில் மழை காரணமாக இன்று பதிவாகிய சேத விபரங்கள் (VIDEO)
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.பெய்துவரும் மழையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 பேரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 3 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்தில் 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாகவும் இன்றும் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம் புகுந்து காணப்படுவதோடு வயல் நிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பொழிந்துவரும் நிலையில் குளங்கள் பல வான் பாய்ந்து வருகிறது.
அத்தோடு கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதோடு கடும் காற்றும் வீசிவருகின்றது.
யாழ்ப்பாணம்
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
காலநிலை தொடர்பாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவித்தார்.
மேலும் அவர் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை J/84 கிராம சேவையாளர் பிரிவில் காற்றுடன் கூடிய மழையின் தாக்கத்தினால் ஒருவீடு சேதம் அடைந்துள்ளதால் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய தற்காலிக இருப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் பாதைகள் தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வியாழக்கிழமை (25) காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலங்களில் இம்மாவட்டத்தில் 119.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு,
காத்தான்குடி, கிரான், உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின்
இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதைகளில் நீர் தேங்கியுள்ளால்
போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் கடல்
கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
