முகத்தில் விஷத்திரவத்தை வீசி எஜமானியை கொலை செய்த வீட்டில் வேலை செய்த பெண்
60 வயதான பெண்ணின் முகத்தில் விஷம் கலந்த திரவத்தை வீசி, தாக்கி கொலை செய்து விட்டு, பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ள வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெல்லம்பிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் பலகை அலுமாரிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் விஷத்திரவம் சமையல் அறையில் இருந்த நிலையிலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய வங்சியா வத்தை பகுதியில் வசித்து வந்த மொஹமட் நசீர் மொஹமட் பாத்திமா என்ற 60 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
1219 என்ற பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு கிடைத்த தகவலை அடுத்து வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று வீட்டில் அறை ஒன்றில் போடப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் முகத்தில் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தாகவும் கண்ணுக்கு கீழே காயம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதுடன் ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த பெண் இரண்டு மாடிகளை கொண்ட வீடொன்றில் கீழ் மாடியில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண்ணொருவர் வீட்டுக்கு வேலைக்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.