நாட்டில் குடும்பங்களின் மாத வருமானம் 60% வீழ்ச்சி: ஆய்வில் வெளியான தகவல்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பங்கள் தங்கள் உணவு நுகர்வுப் பழக்கத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல்,
போதிய உணவு அணுகல் கிடைக்காமைப் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன.
இதன் காரணமாக பல்வேறு வாழ்வாதார அடிப்படையிலான சமாளிக்கும் உத்திகளையும் அந்த
குடும்பங்கள் கையாள்வதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
மேலும் தெரியவருகையில், நாடு முழுவதும் உள்ள 21.9 சதவீத குடும்பங்கள், உணவுப் பற்றாக்குறை அல்லது நிதிக் கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நெருக்கடி மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கிராமப்புறத் துறையில், இந்த நெருக்கடி மூலோபாயம் பயன்படுத்தப்பட்ட விகிதம் 22.8வீதமாக உயர்ந்துள்ளது.
கணக்கெடுப்பின் போது, பல குடும்பங்கள் தங்கள் சராசரி மாத வருமானம் குறைவதற்கு வழிவகுத்த பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டினர். குறைவான வேலை நேரம், வீட்டு வருமானத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் என்பன அதில் உள்ளடங்கியுள்ளன.
இந்தநிலையில் நெருக்கடியின் விளைவாக, குடும்பங்கள் அதன் தாக்கத்தைத் தணிக்க பல்வேறு சமாளிப்பு உத்திகளைக் கையாண்டுள்ளன, அதாவது இரண்டாம் நிலை வேலை அல்லது கூடுதல் வருமானத்திற்குத் திரும்புதல் என்று இதில் அடங்குகின்றன.
வேலையின்மை
குறைக்கப்பட்ட வருமானத்தை எதிர்கொள்ளும் 73.6 சதவீத குடும்பங்களை உள்ளடக்கிய
கணிசமானவர்கள், குறிப்பிட்ட சமாளிக்கும் உத்திகள் எதையும் பின்பற்றவில்லை
என்று திணைக்களம் கூறுகிறது.
இந்தநிலையில் வேலையின்மை அல்லது குறைந்த வருமானத்தை எதிர்கொள்வோரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருகிறது பல குடும்பங்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன. எனினும் இது சுகாதார நிலைமைகளை மோசமாக்கலாம்.
ஏறக்குறைய 29 சதவீதமானவர்கள் ஏதேனும் ஒரு நோயை எதிர்கொள்வதாக கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஏழு சதவீத நோயாளிகள் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாக தங்கள் சிகிச்சை முறைகளை மாற்றியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியால் சிகிச்சை முறைகளை மாற்றிய நோயாளிகளில், 35.1 சதவீதம் பேர் தங்கள் சிகிச்சை இடத்தை மாற்றியுள்ளனர் அத்துடன் 33.9 சதவீதம் பேர் தங்கள் நோய் தீவிரமான கட்டத்தை எட்டும்போது மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.