மட்டக்களப்பில் வீடு உடைத்து திருட்டு! இரண்டு வருடங்களின் பின்னர் 4 பேர் கைது
மட்டக்களப்பில் 2024 ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் உட்பட 4 பேர் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்புறோஸ் வீதியில், கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து, சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் 5 ஆயிரத்து 500 ரூபா பணம் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசி தொடர்பான தகவல்கள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.

அதனடிப்படையில், குறித்த தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த நபர் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
குறித்த தொலைபேசியைப் பயன்படுத்தி வந்த நபரை மட்டக்களப்பு நகரப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காத்தான்குடியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் பணம் கொடுத்து அதனை வாங்கியதாகத் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் மற்றும் மேலும் இரு கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24,38,45,50 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் 24, 38, 45 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும், மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.