ஹோட்டல் சமையல் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை! கல்கிஸ்ஸையில் சம்பவம்
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் தொழிலாளியாகப் பணியாற்றிய நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மலையகத்தின் அப்கொட், ஸ்டேன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதான அந்தோனி சாமி ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
கல்கிஸ்ஸையில் சம்பவம்
கல்கிஸ்ஸை , அத்திடிய, பேக்கரி சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் தொழிலாளியாக பணியாற்றிய ஜேசுதாசன், தன்னுடன் அதே ஹோட்டலில் பணியாற்றிய நால்வருடன் அப்பிரதேசத்தில் அறையொன்றை எடுத்துத் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர் குறித்த அறைக்கு முன்பாக காயங்களுடன் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அவரது முகம், கால்களில் காயங்கள் காணப்பட்டதுடன், வாய், நாசி என்பவற்றில் இருந்து குருதி வடிந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
பொலிசார் வந்து ஜேசுதாசனை களுபோவிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார்.
ஜேசுதாசனுடன் தங்கியிருந்த ஏனைய தொழிலாளிகளுடனான முரண்பாடு காரணமாக அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.