இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை பதிவாகக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
விசேட அவதானம்
இதன் காரணமாக பணியிடங்களில் இருக்கும் போது அதிக நீரை பருகுமாறும், வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீதிகளில் மற்றும் வெளியிடங்களில் வேலை செய்வோர் வெப்பம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், அதிகளவு நீரை பருக வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களுக்குள் சிறுவர்களை விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீர் பருகுவது கட்டாயம்
இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த வெப்பநிலையால் அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு குளிர் நீர், தோடம்பழம், இளநீர் உள்ளிட்டவற்றை சீனி சேர்க்காது எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.
பெரியோர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என்றும், அதிக உடல் பருமனுடையவர்கள் 3 லீற்றர் நீரையும், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லீற்றர் நீரையும் பருக வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாறாக உடலுக்கு தேவையானளவு நீர் பருகுவதை தவிர்த்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஞாபக மறதி போன்ற நோய்கள் ஏற்படும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
முடிந்தளவு பகல் வேளைகளில் வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |